ஆவடியில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக் கொலை.. பதற்றம்- போலீஸ் குவிப்பு...

ஆவடியில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக் கொலை.. பதற்றம்- போலீஸ் குவிப்பு...
X

ஆவடி அருகே கொலை செய்யப்பட்ட யோகேஸ்வரன்.

சென்னை ஆவடி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ரவுடியை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பொத்தூர் வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (34). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியான இவர், கடந்த சில ஆண்டுகளாக வீடுகளுக்கு வர்ணம் பூசும் பெயிண்டராக பணியாற்றி வந்தார்.

யோகேஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவத்தன்று இரவு யோகேஸ்வரன் வழக்கம்போல் பணிக்கு சென்று மாலை பணி முடிந்து பின்னர் வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு உறங்கி கொண்டிருந்தார்.


அப்போது அங்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென யோகேஸ்வரன் வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த யோகேஸ்வரனை சரமாரியாக வெட்டி உள்ளது. யோகேஸ்வரனின் முகம், கழுத்து, தலை என உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைக் கண்ட யோகேஸ்வரனின் மனைவி அலறி அடித்து கூச்சலிட்டார். இந்தக் கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, யோகேஸ்வரனை கொலை செய்த மர்ம கும்பல் அவர்கள் வந்த வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இறந்து கிடந்த யோகேஸ்வரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக யோகேஸ்வரனை சிலர் வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளதாகவும், கொலைக்கு காரணமான கொலையாளிகளை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ரவுடி யோகேஸ்வரன் கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story