ரெயில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் நெமிலிச்சேரி இடையே நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலம் பணிகளை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த நெமிலிச்சேரி திருவள்ளூர் இடையே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் விதமாக நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மற்றும் ரெயில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர் வசதி, நடைமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா எனப் பார்வையிட்டு, அங்குள்ள பயணிகளிடம் ரெயில் நிலையத்தில் அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என்று ரெயிலுக்காக காத்து இருந்த பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், அங்கிருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலில் ஏறி பயணிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பயணிகள் கூறுகையில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு மின்சார ரெயில்கள் சரியாக இயக்கப்பட்டதாகவும் கொரோனா முடிவுக்கு வந்த பிறகு மின்சார ரெயில்கள் எண்ணிக்கை பெரும் அளவில் குறைத்து இயக்கப்பட்டு வருவதாகவும் எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் எடுத்து கூறி தகுந்த நடவடிக்கை விரைவில் எடுப்பேன் என்று உறுதி அளித்தார்
தொடர்ந்து, அவர் புட்லூர், செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நடைபெற்று வருகின்ற ரெயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து, அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருவள்ளூர் ரெயி்ல் நிலையத்தில் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், பயணிகள் கூறிய அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதளித்தார். ரெயில் பயணிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து டெல்லி சென்று ரெயில்வே மந்திரியை சந்தித்து கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் முடிவு செய்துள்ளார். ரெயில்பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க ஆய்வின் போது உடன் வந்த ரெயி்ல்வே அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாரின் இந்த திடீர் ஆய்வால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. இந்த ஆய்வை யொட்டி ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த ஆய்வின்போது, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லைன் டி.ரமேஷ், நிர்வாகிகள் கணபதி, குணாநிதி, ஆவடி யுவராஜ், அமீத்பாபு, விசுவநாதன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu