ஆவடியில் பதுக்கி வைத்த ரூ. 5 கோடியிலான செம்மரங்கள் பறிமுதல்: 4 பேர் கைது
சென்னை ஆவடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 கோடி மதிப்புள்ள 11 டன் செம்மரங்களை பறிமுதல் செய்து, ரெட்ஹில்ஸ் மற்றும் ஆவடியை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேரை சித்தூர் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து, சித்தூர் மாவட்ட எஸ்.பி. செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று மாலை 5 மணியளவில், பிளேர் கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணா மேற்பார்வையில், ரொம்பிசெர்லா எஸ்.ஐ. ஹரிபிரசாத் மற்றும் போலீசார், சின்னகொட்டிகல்லு மண்டலம், தேவரகொண்டா பகுதியில் வாகனங்களை சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியாக, வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு கார், போலீசாரை கண்டதும் நிறுத்தாமல் சென்றது. போலீசார் அந்த வாகனத்தை விரட்டிச்சென்று காரை மடக்கிப்பிடித்தனர். காரை ஓட்டிச்சென்ற சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம் ஐத்தேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தயானந்தா (37) என்பவரை கைது செய்து காரில் இருந்த 8 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, தயானந்தாவிடம் நடத்திய விசாரணையில், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிளேர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணா மற்றும் போலீசார், சென்னை அடுத்த ஆவடியில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 டன் எடை கொண்ட 388 செம்மரங்கள் மற்றும் ஒரு லாரி, 2 கார் என 3 வாகனங்களை பறிமுதல் செய்து ஆவடியை சேர்ந்த சங்கர் (27), ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (27), அசோக்குமார் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரம் மற்றும் வாகனங்களின் மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும் என எஸ்.பி செந்தில் குமார் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu