வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பலி

வாட்டர் ஹீட்டரில்  மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பலி
X

சென்னை ஆவடியில் வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பரிதாபமாக உயரிழந்தனர்.

சென்னை ஆவடியை அடுத்த, அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மருதம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஜயகுமார் (38). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சசிகலா(30). இவர்களுக்கு விகாஷ்(10) என்ற மகனும், ரேஷ்மா(6) என்ற மகளும் உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட விஜயகுமார் அவரது ஊரில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது மகனும் மகளும் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று காலை சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து மதியம் விஜயகுமாரும் அவரது மனைவியும் விழுப்புரத்திற்கு செல்ல வீட்டில் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சசிகலா வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரை கொண்டு தண்ணீரை சூடாக்க முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற சென்ற கணவர் விஜயகுமாரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில் அவர்களைத் தேடி அங்கு சென்ற சசிகலாவின் தம்பி சரவணவடிவேல்(26)உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் அளித்த தகவலின்படி திருமுல்லைவாயில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கணவன் மனைவி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்