வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறை மோதல்

வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக  பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறை மோதல்
X
தேனி மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்ட செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறை மோதலை கடைபிடித்து வருகிறது

தேனி மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறை கடுமையான மோதல் போக்கினை கடைபிடித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் வனநிலங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய்கள், உட்பட அனைத்து வகையான வனவிலங்குகளும் வாழ்கின்றன. இந்த வனநிலங்களை ஒட்டி விளைநிலங்கள் உள்ளன. ஒட்டு மொத்த தேனி மாவட்டமும் இந்த வனவிலங்களுக்குள் தான் அமைந்துள்ளது.

எனவே தேனி மாவட்டத்தில் தேனி நகர் பகுதி உட்பட அத்தனை நகராட்சிகள், கிராம ஊராட்சிகளிலும் வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம். தேனியில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுத்தை வந்து ஆட்டுக்குட்டிகளை அடித்து சாப்பிட்ட தகவல் மக்களை உலுக்கி எடுத்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெரியகுளம், தேவதானப்பட்டி, தேவாரம், கூடலுார் வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்துள்ளனர். கும்பக்கரை மலைப்பகுதியில் காட்டுமாடுகள் முட்டி பலர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது பலத்த மழை பெய்வதாலோ என்னவோ வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் வருகின்றன. கடந்த வாரம் கூடலுாரில் வனநிலங்களை ஒட்டிய விளைநிலங்களில் சிறுத்தை உலவிய படம் சமூக வலைதளங்களில் வெளியானது. சில பத்திரிக்கைகளிலும் வெளியானது. இந்த தகவலை வனத்துறை உறுதியுடன் மறுத்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேவதானப்பட்டியில் சிறுத்தை கடித்து ஒரு நாய் இறந்த தகவல் படத்துடன் சில பத்திரிக்கைகளில் வெளியானது. இதனையும் வனத்துறை மறுத்துள்ளது. அத்துடன் இல்லாமல், செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் போன் செய்து, கடுமையாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சிறுத்தை உலவுவதை உங்களால் நிரூபிக்க முடியுமா? என வனத்துறை அதிகாரிகள் கேட்டால், உங்களால் முடியுமா? என பத்திரிக்கையாளர்கள் எதிர்கேள்வி கேட்கின்றனர்.

மக்களை ஏன் அச்சுறுத்துகிறீர்கள் என வனத்துறை அதிகாரிகள் கேட்டல், மக்களை அச்சுறுத்தவில்லை. அவர்களை எச்சரிக்கிறோம். விழிப்புணர்வுக்காக செய்தி வெளியிடுகிறோம் என பத்திரிக்கையாளர்கள் பதில் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம், வனத்துறை அதிகாரிகளை கண்டித்து, ஆர்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்னர், வனத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்னையில் சமரசம் ஏற்படுத்தினர். இப்படி வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக தேனி மாவட்டத்தி்ல் பத்திரிக்கையாளர்களுக்கும் வனத்துறைக்கும் மோதல் நிகழ்ந்து வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!