கத்தி முனையில் மிரட்டல்: அச்சப்படும் ஆசிரியர்கள் - அதிகரிக்கும் சம்பவங்கள்..!
கோப்பு படம்
'ஏண்டா ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம்' என அசிங்கமாக உள்ளது என ஆசிரியை ஒருவர் கண்ணீருடன் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேவதானப்பட்டியில் மாணவர்கள் சிலர் கத்தியுடன் பள்ளிக்கு வந்தது, ஆசிரியர்களையும், ஆசிரியைகளையும் மிரட்டிய சம்பவத்தை தான் இந்த ஆசிரியை இப்படி கண்ணீருடன் பேட்டியாக கொடுத்திருக்கிறார் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மை நிலை வேறு. மாணவர்கள் கத்தியுடன் வந்தாலும், அணுகுண்டுடன் வந்தாலும் ஆசிரியர்கள் எளிதில் கையாண்டு அவர்களை திருத்தி விடுவார்கள். ஆனால் சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடியின் உச்சகட்டமே ஆசிரியை கண்ணில் இருந்து கண்ணீராக வழிந்தது. இந்த நிலை தேனி மாவட்டத்தில் மட்டும் என நினைக்காதீர்கள். தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த விவரங்களை பார்க்கலாம்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாகவே ஆசிரியர்கள்- மாணவர்கள் பிரச்னை தீவிரமாகி வருகிறது. மாணவர்கள் கத்தியுடன் பள்ளிக்கு வருகின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தால் குத்தி விடுவேன் என மிரட்டுகின்றனர் என்பது தான் பகிரங்கமாக மாணவர்கள் மீது வைக்கப்படும் புகார். தேனி மாவட்டத்தில் மூன்று பள்ளிகளி்ல் மட்டுமே இந்த பிரச்னை உள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக்கல்வி அலுவலகம் வரை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு பார்த்தனர். ஆனால் இதுவரை மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இது கூட ஆசிரியர்களை பெரிதாக பாதிக்கவில்லை. மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், ஆசிரியர் சமூகத்திற்கும் எதிராக நடக்கும் விஷயங்கள் அத்தனையும் கல்வித்துறையும், போலீஸ்துறையும் வேடிக்கை பார்க்கிறது என்பதே ஆசிரியை வடித்த கண்ணீரின் உண்மையான அர்த்தம்.
சில பள்ளிகளில் பகிரங்கமாகவே கஞ்சாவும், போதை புகையிலையும் விற்கப்படுகிறது? இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிந்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் விட கொடுமை, பல பள்ளிகளில் இரவு நேரங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு சமூக குற்றங்கள் நடக்கின்றன. அசிங்கங்கள் நடக்கின்றன. அசிங்கத்தின் கழிவுகள் பள்ளி முழுவதும் சிறிக்கிடக்கின்றன. இதனை மறுநாள் காலை பள்ளிக்கு வரும் ஆசிரியைகள், மாணவர்கள் பார்ப்பதற்குள் சுத்தம் செய்ய வேண்டுமே என்று அவர்களே சுத்தம் செய்து விடுகின்றனர். இது பற்றி கல்வித்துறை மற்றும் போலீஸ் துறைக்கு தெரிந்தும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பல பள்ளிகளில் சமூக விரோதிகள், ஆக்கிரமிப்பாளர்களால் ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பெரும் பிரச்னை நிலவுகிறது. இதைப் பற்றி ஆசிரியர் சங்கம் கூட வாய் திறக்க முடியாது. ஆக்கிரமிப்பாளர்களின் பலம் அப்படிப்பட்டது. இரவு நேர போலீஸ் ரோந்தில் பள்ளி வளாகங்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டும், இன்று வரை இரவில் ஒரு பள்ளி வளாகம் கூட கண்காணிக்கப்படவில்லை.
மாணவர்களை கண்டிக்க உரிமை வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டால், 'கல்வித்துறை அதிகாரிகள், ' அடித்து தான் மாணவர்களை திருத்த முடியுமா? உங்கள் மாணவர்கள் தானே அன்பு காட்டி மிகவும் சிறந்த கற்பித்தல் மூலம் திருத்தவே வழியில்லையா...? என கேட்கின்றனர். தவிர கல்வித்துறை உயர் அதிகாரிகள் பள்ளி நிர்வாகங்களுக்கும், ஆசிரியைகளுக்கும் கொடுக்கும் குடைச்சலை சில ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டுப்பாருங்கள். அவ்வளவு சங்கடங்கள் நிறைந்தவை அந்த டார்ச்சர்.
தேவதானப்பட்டி அரசு பள்ளி மாணவன் பேசுவதாக வெளியான ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவனை பேச வைத்து எடுத்துள்ளார்கள்... அவன் தற்செயலாக பேசியது போல் தெரியவில்லை... என ஆசிரியர் மீதே புகாரை திருப்புகின்றனர். தேவதானப்பட்டி பள்ளியில் மாணவர்கள் கட்டுப்பாடு இன்றி செயல்படுகின்றனர். ஆனால் அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள சில்வார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதே... அந்த பள்ளியில் எந்த குழப்பமும் நடக்கவில்லையே... இதற்கெல்லாம் காரணம் என்ன... இப்படி போலீசார் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
தேவதானப்பட்டி அரசு பள்ளி ஜாதி, அரசியல் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. சில்வார்பட்டி பள்ளியில் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவு வழங்கி உள்ளனர். அங்கு ஜாதி, மத பேதங்களை அணுக விடுவதில்லை. எந்த ஆசிரியரும் தனது மாணவனை ரவுடியாக வளர்க்க விரும்புவதில்லை. அரசியல்வாதிகள், அவர்களின் ஆதரவாளர்கள், கஞ்சா கும்பல், புகையிலை கும்பல்களை கட்டுப்படுத்தினால் எல்லா பள்ளிகளும் சிறந்த பள்ளிகளாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் கல்வித்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டால் தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu