தேனி நகராட்சியில் பலகோடி முறைகேடு: சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?
தேனியில் சாலை சீரமைப்பில் முறைகேடு என திமுகவினர் புகார்
தேனி நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ரோடு போடுவதாக கூறி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி வருகிறோம் என்று தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நிர்வாகத்தில் இருந்த அ.தி.மு.க.,வினர் செய்த தவறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து முதல்வராக வெற்றி பெற்றார் ஸ்டாலின்.
தேனி கூட்டுறவு பால் ஒன்றியத்தில் பணி நியமனத்தில் மட்டும் 12 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என விலாவாரியாக தி.மு.க.,வினர் புகார் அனுப்பினர். தற்போது அந்த புகார் மனு மீது விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகளே தெரிவித்தனர்.
இந்நிலையில் தி.மு.க.,வினர் அடுத்த பகீர் கிளப்பி உள்ளனர். அவர்கள் கூறியதாவது: 'ஐயா, தேனியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இந்த பணி முடியவும் ரோடு போடலாமே' என தன்னிடம் கூறிய உதவியாளரிடம் நகராட்சி உயர் அதிகாரி ஒருவர் 'உனக்கென்னயா அது பத்தி கவலை, முதலில் ரோடு போடுவோம். அடுத்து தோண்டி குழாய் பதிப்போம். ரோடு முழுக்க சேதமாகி விடும். அடுத்து மீண்டும் ரோடு போடுவோம்' அப்போது தான் நமக்கு ரோடு போட அடுத்தடுத்து அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும். கமிஷனும் அதிகம் கிடைக்கும்' என அந்த உயர் அதிகாரி கூறியுள்ளார். இந்த வசனம் தேனியில் கடந்த 10 ஆண்டாகவே உலா வருகிறது. இது பற்றி கிட்டத்தட்ட தேனி மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.
ரோடு சீரமைத்த பின்னர், தோண்டி குழாய் பதித்ததும், மீண்டும் ரோடு போட்டு சீரமைப்பதும், அடுத்து தோண்டி கேபிள் பதிப்பதும் வழக்கமான நடைமுறை. இப்போது தேனியில் போடாத ரோடும் இல்லை. அதேபோல் தோண்டாத ரோடும் இல்லை. கடந்த மாதம் கூட ரோடுகளில் பேட் ஒர்க் பார்க்க பல லட்சம் செலவிட்டனர். இப்போது அதே ரோடுகளை தோண்டி போட்டுள்ளனர்.
பக்கத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பாதாள சாக்கடை முடிந்த இடங்களில் மட்டுமே ரோடு போட வேண்டும் என பேரூராட்சி இயக்குனரகம் உத்தரவிட்டு ரோடு பணிகளை நிறுத்தியது. இப்போது அங்கு அத்தனை ரோடுகளும் புதுப்பிக்கப்பட்டு ஊரே பளிச்சென இருக்கிறது.
தேனியில் சுமார் 600க்கும் மேற்பட்ட ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகளை கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு முறை சீரமைப்பு என்ற பெயரில் புதிதாக போட்டனர். மீண்டும் தோண்டி போட்டுள்ளனர். தற்போது தேனியில் உலா வந்தால் தோண்டிப்போடப்பட்டு இருக்கும் ரோடுகளை காணலாம்.
நகராட்சியில் என்னென்ன வேலை நடக்க உள்ளது. எதை எப்போது செய்ய வேண்டும் என்பது கூடவா? உயர் அதிகாரிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கமிஷன் தான். இதற்கு மேலிடத்தின் ஆசிர்வாதமும் உண்டு. இப்படி ரோடு போடுவதில் நடந்த முறைகேடுகளை மட்டும் கணக்கிட்டால் கோடிகளில் மூன்று இலக்கத்தை கூட எட்டும் போல் தெரிகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் தேனி நகராட்சியில் நடந்த பணிகள், அடுத்தடுத்த நடந்த பணிகள், அதில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரித்தால் பலரிடம் பல கோடி ரூபாய்களை கைப்பற்றலாம். இது குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு விரிவாக தகவல் அனுப்பி உ ள்ளோம். விரைவில் நடவடிக்கை பாயும்' என்றனர்.
இப்போது தி.மு.க.,வினர் எழுப்பி உள்ள இந்த புகாரில் உ ண்மை உள்ளது என தேனியில் வசிக்கும் அத்தனை மக்களுக்கும் தெரியும். விசாரணையில் என்ன நடக்கிறது என பார்ப்போம் என்று தேனியில் மற்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu