பாபநாசத்தில் வாழை இலைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை

பாபநாசத்தில் வாழை இலைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை
X
இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பாபநாசத்தில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய லட்சக்கணக்கான வாழை இலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை,திருச்சி, கோவை, கேரளா, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் மூலம் இரவு சுமார் 2 லட்சம் வாழை இலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று முதல் இரவு நேர ஊரடங்கை அறிவித்ததால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வாழை இலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

இதனால் வாழை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர். குமபகோணம் அடுத்த பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சீனிவாசன் கூறியதாவது

வாழை இலை, வாழைக்காய், பழங்கள் உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வருகிறோம். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து வாழை இலை விற்பனை நடைபெற்று வந்தது.

ஆனால் தமிழக அரசு இரவு நேர திடீர் ஊரடங்கு அறிவித்ததால் எங்களால் லட்சக்கணக்கான வாழை இலைகளை ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பெங்களூர், சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகளுக்கும் அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கிறது.

இதனால் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறி மார்க்கெட்டிற்கு வாழை இலை, பூ, பழங்கள் கொண்டு சென்றால் வாங்க மறுக்கின்றனர்.

காரணம் இரவு நேர ஊரடங்கால் வியாபாரம் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் கடந்த 3 நாட்களாக விவசாயப் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது.

எனவே தமிழக அரசு வாழை இலை, காய்கறி, பழங்களை கொண்டு செல்ல பாஸ் வழங்க வேண்டும். அல்லது அரசு பஸ்சில் எடுத்துச் சென்றாலும் அதற்கான வாடகை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பொருட்கள் அனைத்தும் வீணாகிக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இன்று இரவே வாழையிலை, பூ, பழங்களை வெளி மாநிலங்களுக்கும் பெரு நகரங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil