ரேஷன்கார்டு தராமல் இழுத்தடிப்பு: கடை ஊழியர் மீது கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி புகார்
குடும்ப அட்டை வழங்காமல் இரண்டு ஆண்டுகளாக நிவாரண தொகை, பொருட்களை தரவில்லை என்று குற்றம்சாட்டி, மாற்றுத்திறனாளி தனது மனைவியுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், மாற்றுத்திறனாளி. இவர், சவரத்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய குடும்ப அட்டை கேட்டு, ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு பிறகு, நியாய விலைக்கடைக்கு சென்று கேட்டபோது, தங்களுக்கு குடும்ப அட்டை இன்னும் வரவில்லை என்றும், வந்தவுடன் தெரிவிப்பதாக நியாயவிலை கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மீண்டும் ஆன்லைன் மூலமாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முயற்சித்த போது, ஏற்கனவே குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் தெற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில் கேட்டபோது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அச்சடிக்கப்பட்டு நியாய விலைக்கடைக்கு அனுப்பிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், மாரியப்பனின் கைபேசி எண்ணிற்கு குடும்ப அட்டை வந்ததற்கான ஒப்புதல் குறுஞ்செய்தி கிடைத்துள்ளது. மேலும் குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட கொரானா பேரிடர் கால நிவாரண தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறப்பட்டதாகவும் அவ்வப்போது குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளியான மாரியப்பன், நியாயவிலைக் கடையில் சென்று அந்த குறுஞ்செய்தியை காண்பித்து தனக்கு வழங்கவேண்டிய பொருட்களை உடனடியாக வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் மாரியப்பனுக்கு நிவாரணத்தொகை மற்றும் அரசு வழங்கிய அரிசி உள்ளிட்ட தொகுப்பினை கூட கொடுக்காமல் மிரட்டி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மாரியப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா இருவரும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்க வந்தனர். ஊழியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; தனக்கு கிடைக்கவேண்டிய பலன்களை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu