தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!

சேலம் குமாரசாமிப்பட்டியில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் கொரோனோ நோய்தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 900 பேர் நோய் தொற்று ஏற்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர், கோவேக்ஸின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளை முதற்கட்டமாக போட்டுள்ளனர்.

இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக கோவேக்ஸின் தடுப்பூசி போடுவதற்காக, இன்று காலை 7 மணி முதல் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருந்தனர். காலை 7 மணி முதலே நீண்ட நேரம் காத்திருந்தும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படவிலை.
இதனால் பொறுமையிழந்த 200க்கும் மேற்பட்ட மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சேலம் மாநகர ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் அஸ்தம்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சுகாதார நிலையத்தின் கேட்டை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்ததால் பொதுமக்களை தடுப்பூசி போடுவதற்கு காவல் துறையினர் கேட்டுக்கு வெளியே வரிசையில் நிற்க வைத்தனர்.

பொதுமக்கள் சிலர் கூறுகையில், காலை 7 மணி முதல் தடுப்பூசி போடுவதற்காக காத்திருக்கிறோம். அதிகாரிகள் 10 மணிக்கே வந்தனர். ஒரே இடத்தில் இப்படி சமூக இடைவெளியின்றி தடுப்பூசி போடுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்க அந்தந்தப் பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!