தடுப்பூசி போட வெயிலில் காத்திருக்கும் மக்கள்! சேலம் மாநகராட்சி கவனிக்குமா?
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 700 ல் இருந்து 950 வரை உள்ளது. மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்றானோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 862 மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 230 லிருந்து 241 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சேலம் மாநகராட்சி பகுதியில் 11 மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
இதுவரை சேலம் மாவட்டத்தில் முன்பதிவு செய்த 28 லட்சம் பேரில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்த அளவு மையங்களை உள்ள காரணத்தால் ஒவ்வொரு மையத்திலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு நிழல் வசதி இல்லாத காரணத்தால் ஆங்காங்கு இருக்கக்கூடிய கட்டிட நிழலில் தஞ்சம் அடைகின்றனர்.
இதனால் தனிமனித இடைவெளி இன்றி, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் தடுப்பூசி கவுன்டரிலும் முறையான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால், இடைவெளியின்றி மக்கள் குவிந்து நிற்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, சேலம் மாநகராட்சி நிர்வாகம், இது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தடுப்பூசி மையங்களில் உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu