தொடர் மழையால் குன்னூரில் நீரில் மூழ்கிய மலை காய்கறி பயிர்கள்

தொடர் மழையால் குன்னூரில் நீரில் மூழ்கிய மலை காய்கறி பயிர்கள்
X

தொடர்மழை காரணமாக நீரில் மூழ்கிய காய்கறி பயிர்கள் 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்தான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மலைப்பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன.

குன்னூர் அருகே உள்ள கோலணிமட்டம், முட்டி நாடு, செல்விப் நகர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் மலை காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்டவை பயிரிட்டிருந்தது.

கன மழையால் இந்த பகுதியில் உள்ள ஓடையில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

குன்னூர் அருகே உள்ள சின்ன வண்டிச்சோலை பகுதியில் வசிக்கும் வினோத் குமார் என்பவரின் கார் மீது ராட்சத மரம் விழுந்ததால் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.

குன்னூர் அருகே உள்ள பாரத் நகர், கல்குளி பகுதியில் நடைபாதை மற்றும் குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டதால் 7 குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் அருகே உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டாப் காலேஜ் பகுதியில் இருந்து பந்துமை வழியாக கோத்தகிரி செல்லும் சாலையில் தொடர்ந்து மண் சரிவுஏற்பட்டு வருவதால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் பகுதிக்கு செல்லும் சாலையில் கரன்சி பகுதியில் மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் 5 இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனை உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்தான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனவும், மலைப்பாதையில் வாகனங்களை மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இன்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 57 மில்லி மீட்டரும், கெத்தை பகுதியில் 27 மில்லி மீட்டரும், குன்னூரில் 19 மில்லி மீட்டரும் என மொத்தம் 364 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!