திருச்செங்கோடு பகுதியில் தொடர் செயின் பறிப்பு: பொறியியல் பட்டதாரிகள் கைது

திருச்செங்கோடு பகுதியில் தொடர் செயின் பறிப்பு: பொறியியல் பட்டதாரிகள் கைது
X

பைல் படம்.

திருச்செங்கோடு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பொறியியல் பட்டதாரிகளை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் வசந்தி (43). இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி வெப்படையிலிருந்து சங்ககிரி நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொணடிந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த 2பேர் அவரிடமிருந்த 7 பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்றனர்.

கடந்த 10ஆம் தேதி தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ராஜேஸ்வரி (45) என்பவர் பள்ளிபாளையம் அருகே சென்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். அதே நாளில் சிறுமொளசியைச் சேர்ந்த சரண்யா (36) என்பவரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. வட்டபரப்பு சிறுசேமிப்பு ஏஜெண்ட் கலாவதி (52) என்பவரிடம் தங்க செயின் பறிக்கப்பட்டது. எனினும் அது கவரிங் நகையாகும். கடந்த 21ஆம் தேதி பியூட்டி பார்லர் நடத்தி வரும் சுபாஷிணி (25) என்பவரிடம், பைக்கில் வந்த வாலிபர்கள் சங்கிலியைப் பறிக்க முயன்று முடியாமல் சென்றுவிட்டனர்.

இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நகை பறிப்பு திருடர்களை பிடிக்க எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில், டிஎஸ்பி பழனிசாமி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. எஸ்பிபி காலனி பாலம் அருகில் தனிப்படை போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் அவர்கள் திருச்செங்கோடு அருகேயுள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்த டேவிட் என்கிற ராஜு (24) மற்றும் அருண் (23) என்பது தெரிய வந்தது. இன்ஜினியரிங் பட்டதாரிகளான இருவரும் செலவுக்கு பணம் இல்லாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 14 பவுன் தங்க நகை மற்றும் மோட்டார் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை எஸ்.பி பராட்டினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!