தைப்பூசத்தை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் தீப வழிபாடு

தைப்பூசத்தை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் தீப வழிபாடு
X

கைலாசநாதர் ஆலயம் (பைல் படம்).

சுகுந்த குந்தலாம்பிகை சன்னதியில் தேசிய சிந்தனை பேரவை சார்பில் 108 நெய் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு கைலாசநாதர் சுவாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகருக்கு மத்தியில் மிகப் பழமையான சுகுந்த குந்தலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்று வட்டார பகுதியில் வசிப்பவர்கள் இறக்குத்தி கோவில் என்று அழைப்பார்கள். இந்த கோவில் தைப்பூச தேரோட்டம் 1971-ம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியார் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு சுமார் 52 ஆண்டுகளாக தைப்பூச தேரோட்டம் நடைபெற வில்லை.


இதற்காக கடந்த 8 ஆண்டுகளாக தேசிய சிந்தனை பேரவை சார்பில் தைப்பூச தினத்தில் கைலாசநாதர் கோவிலில் தீப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்று பிரார்த்தனை வைக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தைப்பூச தேரோட்ட விழா தொடங்கியது. நேற்று தை வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷ தினத்தில் மாலை சுகுந்த குந்தலாம்பிகை சன்னதியில் தேசிய சிந்தனை பேரவை சார்பில் 108 நெய் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு கைலாசநாதர் சுவாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


இதுகுறித்து தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், தைப்பூச தேரோட்ட விழா நடைபெறுவதற்கு காரணமாக இருந்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் மற்றும் தேவஸ்தான உதவி ஆணையர் ஆகியோருக்கு பக்தர்கள் சார்பில் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் பேரவை துணைச் செயலாளர் பார்த்திபன், பத்மினி, ராஜம்மாள், ஸ்ரீநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்