திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் ஸ்ரேயா பங்கேற்பு
திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு பதிவேடுகளை சரிபார்த்தார்.
திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில், திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா தலைமையில் நடைபெற்றது.
கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படவில்லை. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் மனுக்களை அளிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மனுதாரர்களுக்கு தனியே தெரிவிக்கப்படுகின்றன. அதனடிப்படையில், திருச்செங்கோடு தாலுக்கா அலுவலகத்தில் பொதுமக்களால் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் சீலிடப்பட்ட பெட்டிகளில் வரப்பெற்ற பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, எலக்ட்ரானிக் ரேசன் கார்டு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வருவாய்த்துறை அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜமாபந்தியில், திருச்செங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட விஏஓக்களிடம் உள்ள கிராம எப்எம்பி நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, பிறப்பு இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு, கிராம அ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை தனித்தனியே கலெக்டர் பார்வையிட்டு சரிபார்த்தார்.
வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது விஏஓக்கள் வைத்துள்ள பதிவேடுகளில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதை கலந்தாலோசனைகள் மூலமாக உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். ஜமாபந்தியில், வேளாண்மை துறை உதவி இயக்குநர்கள் ஜெயமணி , தனம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் சின்னதுரை , வாசு, தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu