திருச்செங்கோட்டில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
திருச்செங்கோட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் எம்.பி. சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்செங்கோடு நகராட்சி, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், சமூக நலத்துறையின் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் எம்.பி. சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்களை கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், குழந்தைகளின பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல், மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல், மகப்பேறு உதவித்திட்டங்கள், தாய்ப்பாலின் அவசியம் மற்றும் நன்மைகள், இணை உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் இன்று திருச்செங்கொடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருச்செங்கொடு நகராட்சியை சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மேலும் 15 வட்டாரங்களிலும் விரைவில் சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசை பொருட்கள், மதிய உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற்கொள்ள மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற காலங்களில் 12 கிலோ எடை கூடினால் மட்டுமே 3 கிலோ எடையுள்ள குழந்தைகள் பெற்றெடுக்க முடியும். எனவே இந்த காலக்கட்டத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு நல்ல முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமென அவர் கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த அபிவிருத்திக்காக பேரிச்சை பழங்கள், விட்டமின் சி சத்துள்ள தேன்நெல்லி, புரதச்சத்திற்காக கடலைமிட்டாய், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல், பூ, மஞ்சள், மற்றும் சர்க்கரை பொங்கல், புதினா சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம் உள்ளிட்ட 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், திருச்செங்கொடு நகராட்சித் தலைவர் நளினி சுரேஷ் பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுஜாதா தங்கவேல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) மோகனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu