சேந்தமங்கலம் அருகே கிரஷர் தொழிலாளி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
பைல் படம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள, பேரமாவூரை சேர்ந்தவர் கனகசபை (54). இவருடைய மனைவி ராஜலட்சுமி. மகன் மணிவேல். கனகசபையும், மணிவேலும் கொண்டம நாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள ஸ்ரீபாலன் (37) என்பவருக்கு சொந்தமான கல் உடைக்கும் கிரசரில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக மணிவேல், ஸ்ரீபாலன் கிரசருக்கு வேலைக்கு செல்லாமல் வேட்டாம்பட்டியில் உள்ள வேறு ஒரு கிரசருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீபாலன் கனகசபையிடம் விசாரித்ததுடன், அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் கனகசபை மனவேதனையில் இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலை கனகசபை வெளியே சென்று வருவதாக மனைவி ராஜலட்சுமியிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அப்போது கனகசபை பேரமாவூர் அருகே மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கனகசபை பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, கனகசபையின் தற்கொலைக்கு காரணமான கிரசர் உரிமையாளர் ஸ்ரீபாலனை கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள், நாமக்கல் - சேந்தமங்கலம் மெயின் ரோட்டில் அக்கியம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் (பொ) குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கனகசபையை மிரட்டிய கிரசர் உரிமையாளர் ஸ்ரீபாலனை கைது செய்தால்தான் மறியலை கைவிடுவோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னர், மரத்தில் சடலமாக தொங்கிய கனகசபை உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் கிரசர் தொழிலாளி கனகசபையை தற்கொலைக்கு தூண்டியதாக, அதன் உரிமையாளர் ஸ்ரீபாலன் மீது சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu