கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை ஆய்வு
கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் தடுப்பணை அமைப்பது குறித்து, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், காரவள்ளி அருகில் கொல்லிமலை அடிவாரத்தில், பெரியாறு என்ற ஆறு ஓடுகிறது. மழை காலங்களில் கொல்லிமலை மீது பெய்யும் தண்ணீரால் இந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். இந்த தண்ணீர் நடுக்கோம்பை, துத்திக்குளம் வழியாகச்சென்று சின்னகுளம், பொம்மசமுத்திரம் ஆகிய ஏரிகளை நிரப்பும்.
பின்னர், பொன்னார் வழியாகச் சென்று தூசூர் ஏரியை நிரப்பும், அங்கிருந்து ஆண்டாபுரம் ஏரிக்குச்சென்று பிறகு, வெள்ள நீர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் கலக்கும். இந்த தண்ணீரை தேக்கி வைத்து தடுப்பணை அமைத்தால், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படும், மேலும் கொல்லிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை அமைக்கப்படும் என்று சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தடுப்பணை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது தமிழக அரசால் துவக்கப்பட்டுள்ளன. இதையொட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து பெரியாற்றில் தடுப்பணை அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலம் பொதுப்பணித்துறை வடிவமைப்பு செயற்பொறியாளர் பிரகாஷ், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் தடுப்பணை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்மூலம் பயன்பெறும் பாசன ஆயக்கட்டு பரப்பு குறித்தும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu