முன்னாள் எம்.பியின் பேரன் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் விசாரனை

முன்னாள் எம்.பியின் பேரன் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் விசாரனை
X

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே முன்னாள் எம்.பி.,யின் பேரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கல்லிட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). விவசாயி. இவர் முன்னாள் எம்.பி ஜி.பி சோமசுந்தரத்தின் பேரன். இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் மனைவி சுகுணாவுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு மகன், ஒரு மகள், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். அவர்களது மகள் காதல் திருமணம் செய்து கொண்டு கணவர் நவீனுடன் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ராஜேந்திரனின் மருமகன் நவீன், மாமனார் சொத்தில் தனக்கும் பங்கு தரவேண்டும் என்று கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் தனக்கு சொந்தமான நிலத்தை பேளுக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார். இதனால் அவருக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜேந்திரன், தனது மனைவி சுகுணாவுடன் வீட்டில் படுத்த தூங்கிக் கொண்டிருந்தார். சுமார் 11 மணி அளவில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு கணவன், மனைவி இருவரும் திடுக்கிட்டு எழுந்தபோது, திடீரென மர்ம நபர்கள் சுகுணாவை தாக்கினர். ராஜேந்திரன் அவர்களை தடுக்க முயன்றார்.

அப்போது அவர்கள் சுகுணாவின் கண் முன்பே ராஜேந்திரனை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தகவல் கிடைத்ததும், பேளுக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரனை நடத்தினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் நிலத்தை விற்பனை செய்ததில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்