கொல்லிமலையில் வனத்துறை மூலம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி: கலெக்டர் ஆய்வு
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் அருகில் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செம்மேடு சீக்குப்பாறை வியூ பாயிண்ட் பகுதியை பார்வையிட்டார். அறப்பளீஸ்வரர் கோயில் அருகில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலையின் உச்சியில் இருந்து அருகில் உள்ள மலை சிகரங்களை பார்வையிடும் வகையில், வனத்துறை மூலம் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா உருவாக்கும் பணியினை பார்வையிட்டார்.
அங்கு யானை தனது குட்டியுடன் இருப்பது போன்ற சிலையும், ஒட்டகச்சிவிங்கி தனது குட்டியுடன் கொஞ்சுவது போன்ற சிலையையும் பார்வையிட்டார். அங்கு இருவர் தங்குவதற்கு ஏற்ற குடில்கள் உயரமாக, இயற்கை சூழலில் உருவாக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
இங்குள்ள காட்சி அரங்கில் 25 க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றிற்கான எண்ணை அழுத்தும்போது அவைகளின் ஒலி எழுப்பும் வகையில் நவீன கருவிகளைக் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் புலி, சிறுத்;தை, குயில், கிளி உள்ளிட்ட பறவைகள் எழுப்பும் இயற்கையான சத்தம் பதிவு செய்யப்பட்டு அவை நம் கண்முன்னே நடமாடுவது போன்ற சத்தம் உருவாக்கப்படுகின்றது.
மேலும் இங்கு சிறிய குன்று ஏற்படுத்தப்பட்டு அதன்மீது ஏறுவதற்கு பாதையும், செல்லும்பகுதியில் புல்வெளியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த குன்றினை பார்வையிட்ட கலெக்டர், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வில், கொல்லிமலை வனச்சரக அலுவலர் சுப்புராயன், பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராமசாமி, பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் கிருஷ்ணன், பிடிஓக்கள் ரவிச்சந்திரன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu