கொல்லிமலைப்பாதை தடுப்பு சுவர்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள்
கொல்லை மலைக்கு செல்லும் மலைப்பாதை தடுப்பு சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு அருவிகள், தோட்டக்கலைப் பூங்கா, படகு இல்லம், சிறப்பு பெற்ற கோயில்கள் என பல்வேறு இடங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொல்லிமலையில் மிகச்சிறப்பாக நடைபெறும். இங்குள்ள ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி அரப்பளீஸ்வரரை வழிபாடு செய்வார்கள். கொல்லிமøயில் உள்ள மலைவாழ் மக்களும், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளும் ஆடிப்பெருக்கு பண்டிகையை மிகச்சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா இந்த நேரத்தில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வல்வில் ஓரி விழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு ஆக. 2, 3 தேதிகளில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, மலர்க்கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொல்லிமலையில் நடைபெறுகிறது. மேலும் இந்த விழாவுக்காக நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொல்லிமலை வருவார்கள்.
கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாமக்கல் மாவட்டம் காரவள்ளியில் இருந்து 70 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதையைக் கடந்து மலைக்குச் செல்ல வேண்டும். இந்த நிலையில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில், நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, சுற்றுலாத் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கொல்லிமலைக்குச் செல்லும் மலைப்பாதையின் தடுப்பு சுவர்களில் வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில் ஆங்காங்கே வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகளில் கண்டு ரசித்து செல்கின்றனர். பலர் ஆர்வமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu