குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி பங்கேற்பு
கொல்லிமலை வயநாடு பஞ்சாயத்து பகுதியில், குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாமக்கல் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, பைல்நாடு பஞ்சாயத்து, மேக்கினிக்காடு கிராமத்தில், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டஎஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கொல்லிமலையில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதனை முற்றிலும் மலைவாழ் மக்கள் நிறுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு, 18 வயதுக்குமேல்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்தந்த பகுதியில் படித்த இளைஞர்கள், இதுகுறித்து மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற திருமணம் நடந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தரவேண்டும்.
குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து, 25 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொடுத்தால், அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையும். கொல்லிமலை முழுவதும் குழந்தை திருமணத்தை தடுக்க போலீசார் கண்காணிக்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். திரளான உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu