3 நாட்கள் தொடர்விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

3 நாட்கள் தொடர்விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த   சுற்றுலாப் பயணிகள்
X

கொல்லிமலை ஆகாசகங்கை அருவியில் உற்சாகத்துடன் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள்

தொடர் விடுமுறையால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்

தொடர்விடுமுறையால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து குவிந்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஈக்கோ டூரிசம் என்னும் இயற்கை சுற்றுலாத்தலமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இங்கு புராண சிறப்புப் பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், ஆகாய கங்கை அருவி, நம்ம அருவி, மாசிலா அருவி, சிற்றருவி ஆகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அரசு தோட்டக்கலைப்பண்ணை, மூலிகைப்பண்ணை, காட்சி முணையம், படகு குழாம் பேன்றவை இங்குள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.

கொல்லிமலைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும், மூலிகை ஆராய்ச்சியாளர்களும் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த 18 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் சோளக்காடு பகுதியில் அமைந்துள்ள சந்தையில் மலைவாழ் மக்களிடம் இருந்து மிளகு, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள், மலை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பலாப்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்தனர். அவர்கள் பழமை வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, நீர்வீழ்ச்சிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது டூ வீலர் மற்றும் கார்களை அறப்பளீஸ்வரர் கோயிலைச் சுற்றிலும் நிறுத்தி வைத்தததால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனி இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகாள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story