அரியாகவுண்டம்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்: ஆட்சியர் நலத்திட்ட உதவி வழங்கல்
அரியாகவுண்டம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இராசிபுரம் தாலுக்கா, அரியாகவுண்டம்பட்டியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பல்துறை பணிவிளக்க முகாம் கண்காட்சியினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
கொரோனா நோய்த்தொற்று தற்போதும் தொடர்ந்து கொண்டுள்ளது. தற்போது புதிதாக ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா நோய் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது. எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட அரசு அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
18 வயது குறைவான பெண்ணிற்கும், 21 வயது குறைவான ஆணுக்கும் திருமண செய்து வைத்தால், திருமணம் நடைபெற காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 திருமணங்களை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார். முகாமில், மொத்தம் 126 பயானளிகளுக்கு ரூ.37.59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu