நூல் விலை : வெண்ணந்தூர் பகுதியில் 5,000 விசைத்தறிகள் ஸ்டிரைக்
கோப்பு படம்
தமிழகத்தில், மிக முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவுத்தொழில், நேரடியாகவும், மறைமுகமாகவும், சுமார் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், மிக முக்கியத் தொழிலாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக, விசைத்தறித் தொழில், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஜி.எஸ்.டி. போன்ற பிரச்சினைகளால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது வரலாறு காணாத வகையில், நூல் விலை உயர்ந்துள்ளதால், விசைத்தறி நெசவுத்தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், 50 கிலோ கொண்ட 40ம் நெம்பர் நூல், ஒரு சிப்பம் ரூ.9,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ. 14,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 நாட்களில் ஒரு சிப்பத்திற்கு ரூ.5.000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, வெண்ணந்தூர் விசைத்தறி சங்கத் தலைவர் மாதேஸ்வரன், சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் ஆகியோர் கூறியதாவது:
நூல் விலை அபரிதமாக உயர்ந்துள்ளது. இதனால், தற்போது விசைத்தறித் தொழில் லாபகரமாக இல்லை. பலரும் தங்கள் தறிகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இத்தொழிலையே நம்பி உள்ளவர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது. வெண்ணந்தூர் பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட, விசைத்தறி மற்றும் ஆட்டோ பவர்லூம் தறிகள் உள்ளன. இங்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இரண்டு நாட்கள், விசைத்தறிக்கூடங்களை திறக்காமல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளோம்.
இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு, ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்படும். அதனால், நெசவாளர்களின் நலனை காக்க, நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருவதால், அவற்றை கண்காணிக்க முத்தரப்பு குழு ஒன்றை அமைத்து, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu