முள்ளுக்குறிச்சியில் பழங்குடியினர் பட்டு வளர்ப்பு பண்ணைகளை கலெக்டர் ஆய்வு
முள்ளுக்குறிச்சியில் நவீன தொழில்நுடப்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் பட்டு வளர்ப்பு பண்ணையை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.
பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட சாயில் டூ சில்க் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சியில் பழங்குடியினர் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தொழில் மல்பெரி சாகுபடி, பட்டுப்புழுவளர்ப்பு, பட்டு நூற்பு என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட தொழிலாகும். பட்டு நூற்பு தொழில் முனைவோர்களால் குடிசைத் தொழிலாகவும், பெரிய அளவிலான பட்டு ஆலைத் தொழிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பட்டு வளர்ப்புத் தொழிலில் சமீப காலத்தில் அதிகளவு மகசூல் தரக்கூடிய மல்பெரி ரகங்கள், சிறப்பான நவீன தொழில் நுட்பங்கள், நோய் தடுப்பு முறைகள், தரமான அதிக அளவு பட்டுக்கூடு அறுவடை தரவல்ல பட்டுப்புழு இனங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தரம் வாய்ந்த பட்டுக்கூடுகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இம்முறைகளை கையாளுவதால் குறைந்த மூலதனத்தில் அதிக அளவு தரமான பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்து வருமனம் பெற முடியும்.
முள்ளுக்குறிச்சி பகுதியில், பழங்குடியினர் சிறப்புத் திட்டத்தின் கீழ், 12 பழங்குடியின விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, சிரஞ்சீவிகள் பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு நூற்பு மற்றும் பட்டுநூல் முறுக்கேற்றும் விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய மல்பெரித் தோட்டங்கள் நடவு செய்யப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கென நடவு மானியம் ஏக்கருக்கு ரூ.45,000- வீதம் 12 ஏக்கருக்கு ரூ.5,40,000, மல்பெரி நடவு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏக்கருக்கு ரூ.33,600 வீதம், 12 ஏக்கருக்கு ரூ.4,03,200 மானியம் வழங்கப்பட்டுள்ளது. தனி புழு வளர்ப்பு மனை குடில் அமைத்த 9 பட்டு விவசாயிகளுக்கு ரூ.2,25,000- வீதம் ரூ.20,25,000 புழு வளர்ப்பு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 3 புழு வளர்ப்பு மனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தனி புழு வளர்ப்பு மனை அமைத்த 9 பட்டு விவசாயிகளுக்கு பட்டு புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ரூ. 52,500 வீதம் 4,72,500 மதிப்பிலான புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபரகணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பட்டு விவசாயி சாந்தி ராஜமாணிக்கம் என்பவரது மல்பெரி தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு, மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் கிடைக்கும் வருமானம் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது நாமக்கல் சப் கலெக்டர் கோட்டைக்குமார், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை பிடிஓ சரவணவன், சுந்தரம், இளைநிலை பட்டு வளர்ப்பு ஆய்வாளர் வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu