இராசிபுரம் அருகே கிராம சபைக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு
இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் காக்காவேரி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியைத் தவிர மீதமுள்ள பஞ்சாயத்துக்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. காக்காவேரி பஞ்சாயத்தில், கிராம சபைக் கூட்டம் வேலம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
இதில், பொதுமக்களுடன், அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட, வேலம்பாளையம் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக வழங்கப்படவில்லை. திட்டப்பணிகள் செய்யாமலேயே 36 பணிகள் செய்துள்ளதாக நோட்டீஸ் அடித்து ஊராட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என புகார் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வரவு -செலவு கணக்கு விவரங்களைக் கேட்டு கேள்வி எழுப்பினர். இதனால் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல், தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தகவலறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வேலம்பாளையம் பகுதி பொதுமக்கள் இந்த கிராம சபைக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம். மாவட்ட கலெக்டர் தலைமையில் மீண்டும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu