பட்டணம் பள்ளத்து கருப்பசாமி கோயிலுக்கு ராட்சத அரிவாள்கள்: பக்தர் காணிக்கை
பட்டணம் பள்ளத்து கருப்புசாமி கோயிலுக்கு பக்தர் வழங்கிய ராட்சத அரிவாள்கள் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்டது.
ராசிபுரம் அருகே பட்டணம் பள்ளத்து கருப்புசாமி கோயிலுக்கு 1 டன் எடையில் 21 அடி நீளமுள்ள 2 ராட்சத அரிவாள்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்புசாமி கோயில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இதில், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒரே இரவில் மட்டும், ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாக்கள் வெட்டி சாமிக்கு படைத்து விருந்து வைத்து சாப்பிடுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால், இந்த கோயிலில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பட்டணம் கருப்புசாமி சித்திரைத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதற்காக வெளியூர்களில் இருந்து கார் மற்றும் பேருந்துகளில் ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோயிலுக்கு பட்டணம் பகுதியைச் சேர்ந்த வள்ளி மருத்துவமனை உரிமையாளர் ராஜா, அவரது மனைவி சாந்தி ஆகியோர் 1 டன் எடையும், 21 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான இரும்பிலான அரிவாள் மற்றும் கை வடிவிலான 5 அடி கொண்ட கிரனைட் பீடம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த அரிவாள்கள் டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டது.
கருப்புசாமி கோயில் முன்பு லாரி நிறுத்தப்பட்டு கிரேன் உதவியுடன் அரிவாள்கள் லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் அந்த அரிவாள்களுக்கு பூஜை செய்யப்பட்டு கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu