ராசிபுரம் பகுதியில் கனமழையால் விளைநிலங்கள் பாதிப்பு: கலெக்டர் ஆய்வு

ராசிபுரம் பகுதியில் கனமழையால் விளைநிலங்கள் பாதிப்பு: கலெக்டர் ஆய்வு
X

ராசிபுரம் பகுதியில் பெய்த கனமழையால், சந்திரசேகரபுரம் ஏரி நிரம்பி, வெள்ள நீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் சேதமடைந்த விளைநிலங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

ராசிபுரம் பகுதியில் பெய்த கனமழையால் சந்திரசேகரபுரம் ஏரி நிரம்பி விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு மொத்தம் 54 செ.மீ மழை பெய்தது. ராசிபுரம் பகுதியில் மட்டும் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆண்கள், பெண்கள் சிகிச்சை பிரிவுகள், குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தும் பிரிவு உள்ளிட்ட 4 சிகிச்சை பிரிவுகளில் மழை நீர் சூழ்ந்தது.

உடனடியாக நாமக்கல் ஆர்டிஓ, ராசிபுரம் நகராட்சி தலைவர், மற்றும் அலுவலர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டு, நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் மழைநீரை அகற்றினர். இப்பிரிவுகளில் சிகிச்சை பெற்று வந்த 49 நோயாளிகள் புதிய கட்டிடத்தில் உள்ள பிற பிரிவுகளுக்கு மாற்றப்பட்டனர். ஆஸ்பத்திரியில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் தாலுக்கா, தட்டாங்குட்டை ஏரி மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ளது. இதனால் வெள்ள நீர், ஏரிக்கு அருகில் உள்ள சந்திரசேகரபுரம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்துள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களின் விவரங்களை தொகுத்து அறிக்கை அனுப்புமாறு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நகராட்சி தலைவர் கவிதா சங்கர், நகராட்சி கமிஷனர் அசோக்குமார், வேளாண் உதவி இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!