பரமத்திவேலூரில் வாழைத்தார் சந்தைக்கு அனுமதி: விவசாயிகள் மகிழ்ச்சி
கோப்பு படம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர், பாலப்பட்டி, நன்செய் இடையாறு, பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் நாள்தோறும் பரமத்தி வேலூரில் நடைபெறும் வாழைத்தார் ஏலச் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்வார்கள். சேலம், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாழைத்தார்களை கொள்முதல் செய்து எடுத்துச்செல்வார்கள்.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 1 மாதத்திற்கு மேலாக, பரமத்தி வேலூரில் வாழைத்தார் ஏலசந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதனால், வாழை மரங்களில் உற்பத்தியாகும் வாழைத்தார்களை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வாழை விவசாயிகளைக் காப்பாற்ற ப.வேலூர் வாழைத்தார் ஏலச் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையொட்டி, பரமத்தி வேலூரில் வாழைத்தார் சந்தை வாரத்தில் 3 நாட்கள் செயல்பட திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி அனுமதியளித்துள்ளார்.
இதுகுறித்து, ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் குப்புதுரை கூறியுள்ளதாவது: பரமத்தி வேலூரில் வாழை மார்க்கெட் திறப்பு தொடர்பாக பரமத்தி தாலுக்கா ஆபீசில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி கலந்துகொண்டு வாழைத்தார் ஏலசந்தையை திறக்க அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி, வாரத்தின் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் ரோட்டில், செல்லாண்டியம்மன் கோயில் அருகில் வாழை மார்க்கெட் செயல்படும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியில் கெரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu