காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடையால் மீனவர்கள், தொழிலாளர்கள் பாதிப்பு
காவிரியில் வெள்ளப்பெருக்கால், பரிசல் இயக்கவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வேலை இழந்து கரையில் அமர்ந்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனமழையால், தண்ணீர் வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் சுமார் 1.33 லட்சம் கன அடி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதையொட்டி, காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையம், ஜேடர்பாளையம், கண்டிபாளையம், அய்யம்பாளையம் மற்றும் பிலிக்கல்பாளையம் பரிசல் துறைகளில் இருந்து எதிர் கரையான ஈரோடு மாவட்டம் கொளாநல்லி, கருவேலம்பாளையம், ஊஞ்சலூர், வெங்கம்பூர் மற்றும் கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசல்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீன் பிடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள பரிசல் ஒட்டும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க ஆற்றுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் மீன் பிடித்து அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சமைத்து கொடுக்கும் தொழிலில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரைகளையும் தொட்டு செல்வதால் காவிரி ஆற்றுப் பகுதி மற்றும் காவிரி பாலத்தில் சென்று பொதுமக்கள் பார்ப்பதற்கும், செல்பி எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu