மோகனூர்- நெரூர் தடுப்பணை விரைவில் அமைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை

மோகனூர்- நெரூர் தடுப்பணை விரைவில் அமைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை
X
மோகனூர்- நெரூருக்கு இடையே காவிரியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள ஒருவந்தாருக்கும், கரூர் மாவட்டம், நெரூருக்கும் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தின் ஆய்வுப் பணிக்காக ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வே பணிகள் நடைபெற்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சர்வே பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடித்து, தடுப்பணை கட்டுமான பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையொட்டி, தமிழக விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்லராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர், திருச்சி நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா, பொய்யேரி, கொமராபாளையம் மற்றும் மோகனூர் பாசன வாய்க்கால்களை ரீமாடலிங் செய்வதற்காக, ஏற்கனவே ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதில், பல இடங்களில் பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இப்பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், விவசாயிகளிடம் கூறியுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!