பரமத்திவேலூர் பகுதியில் வெற்றிலை விலை சரிவு; விவசாயிகள் கவலை

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்காவில் உள்ள பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் வெற்றிலை, கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிஉள்ளிட்ட பல மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

ப.வேலூரில் உள்ள வெற்றிலை ஏல மார்க்கெட்டில், கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி ரக வெற்றிலை, 104 கவுளி கொண்ட இளம்பயிர், சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதிய பயிர் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதிய பயிர் ரூ.1,500 க்கும் ஏலம் போனது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர், 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதிய பயிர் சுமை ஒன்று ரூ.1,500-க்கும், கற்பூரி வெற்றிலை முதிய சுமை ஒன்று ரூ.1,000-க்கும் ஏலம் போனது. வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!