குடிக்க பணம் தராததால் உருட்டு கட்டையால் தாக்கி நண்பரை கொலை செய்த நபர்

குடிக்க பணம் தராததால் உருட்டு கட்டையால் தாக்கி நண்பரை கொலை செய்த  நபர்
X
குடிக்க பணம் தராததால், ரிக் தொழிலாளியை உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரை சேர்ந்தவர் காந்திமதி. இவருடைய மகன் கணேசன் (33), ரிக் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (35). கணேசனும், சரவணக்குமாரும் நண்பர்கள். கணேசனிடம், சரவணக்குமார் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை மணியனூர் அண்ணமார் கோயில் பின்பகுதியில் நண்பர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது சரவணக்குமார், தனக்கு மது குடிக்க பணம் தருமாறு கணேசனிடம் கேட்டுள்ளார். ஆனால் கணேசன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து கணேசன் தலையில் பயங்கரமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் கணேசனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பரை கொலை செய்த சரவணக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்