நாமக்கல் நகராட்சியின் அடுத்த தலைவர் யார்? பொதுமக்கள் ஆர்வம்

நாமக்கல் நகராட்சியின் அடுத்த தலைவர் யார்? பொதுமக்கள் ஆர்வம்
X

புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் நகர் மன்றம் 

சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நாமக்கல்லின் முதல் நகராட்சித் தலைவராக யார் பொறுப்பேற்பார் என பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்

சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாமக்கல் நகராட்சிக்கு முதல் முறையாக தலைவர் பதவி ஏற்கப்போவது யார் என்பது குறித்து அறிந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.

நாமக்கல் நகரம் 1943 முதல் 1970 வரை பேரூராட்சியாக இருந்து வந்தது. கடந்த 17.1.1970 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 1.4.75 முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் கடந்த 14.12.1988 முதல் தேர்வு நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. கடந்த 21.1.2011 முதல் நகரை ஒட்டியுள்ள 9 கிராம பஞ்சாயத்துக்கள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, தற்போது 39 வார்டுகளுடன் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் நகராட்சியில் ஆண்கள் 59,813, பெண்கள் 59,648, இதரர்கள் 30 என மொத்தம் 1,19,491 பேர் வசித்து வருகின்றனர். டவுன் பஞ்சாயத்தாக இருந்து, நகராட்சியாக தரம் உயர்ந்தப்பட்டு சுமார் 52 ஆண்டுகளாக நாமக்கல் நகராட்சித் தலைவர் பதவி எவ்வித ஒதுக்கீடும் இல்லாமல் பொதுவில் இருந்து வந்தது.

நாமக்கல் நகராட்சியின் முதல் தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனிவேலன் பணியாற்றினார். கடந்த 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த து.சு.மணியன் நகராட்சித் தலைவரானார். 2001ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் நகராட்சித் தலைவரானார். 2006ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த எல்ஜிபி செல்வராஜ் நகராட்சித் தலைவராக வெற்றிபெற்றார். 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கரிகாலன் வெற்றிபெற்று நகராட்சித் தலைவராக கடந்த 2016வரை பணியாற்றினார். தற்போது முதல் முறையாக நாமக்கல் நகராட்சித்தலைவர் பதவி எஸ்.சி (பொது) பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சி தலைவர் பதவி இட ஒதுக்கீட்டில் எஸ்.சி பிரிவிற்கு ஒதுக்கப்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக நகராட்சித் தலைவர் கனவில் மிதந்து வந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் கனவு பலிக்கவில்லை. நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 22வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தனசேகரன் என்பவரும், 25வது வார்டுக்கு போட்டியிட்ட ஸ்ரீதேவி என்பவரும் திமுக ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 37 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் 37 வார்டுகளில் 36 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். தற்போது நகராட்சியில் திமுகவின் பலம் 38 ஆகவும், அதிமுகவின் பலம் 1ஆகவும் உள்ளது.

நாமக்கல் நகராட்சித் தலைவர் பதவி எஸ்சி பிரிவிக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் முதல் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2011ம் ஆண்டு வரை நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள பழைய நகராட்சிக் கட்டிடத்தில் நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. கடந்த ஆட்சியில் நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில், புதிய பிரம்மாண்டமான நகராட்சிக் கட்டிடம் கட்டப்பட்டு 2018ம் ஆண்டு திறக்கப்பட்டது.

தற்போது நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நகர்மன்றக்கூட்ட அரங்கு கட்டப்பட்டு, அதில் முதல் கூட்டம் வருகின்ற மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. அன்று நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பார்கள். மீண்டும் 4ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும். எஸ்.சி. பொது பிரிவிற்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால், பிரபலமானவர்கள் யாரும் போட்டியில் இல்லை. 39ல் 38 பேர் திமுக கவுன்சிலர்களாக உள்ளதால், மாவட்ட பொறுப்பாளரும், கட்சித்தலைமையும் யாரை முடிவு செய்கின்றனரோ அவரே தலைவராகவும், துணைத்தலைவராகவும் பதவியேற்பார்கள்.

நாமக்கல் நகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற, திமுக கவுன்சிலர்கள் 38 பேரும், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி ஆகியோர் தலைமையில் சென்னை சென்று, தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று நாமக்கல் திரும்பிவிட்டனர்.

மார்ச் 2ம் தேதி நடைபெறும் முதல் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பதவியேற்பு நடைபெறும். இதற்காக நகராட்சி நகர்மன்றக் கூட்ட அரங்கை தயார் படுத்தும் பணியில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அரங்கம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் என்பதால் இருக்கைகள் மற்றும் மேசைகள் அனைத்தும் நவீன மயமாக புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. நவீன ஆடியோ சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி கவுன்சிலர்கள் இருக்கைகளில் வார்டு நம்பர் எழுதப்பட்டுள்ளன. நகராட்சித் தலைவர் மற்றும் கமிஷனர் இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, நகராட்சித் தலைவராக பொறுப்பேற்கப் போவது யார், துணைத்தலவராக பொறுப்பேற்பது யார், என்பதை அறிந்துகொள்ள நகராட்சிப் பொதுமக்கள் ஆவலாக உள்ளனர். வரும் மார்ச் 4ம் தேதி இதற்கான விடை தெரிந்துவிடும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!