இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் திருச்செங்கோட்டில் காலமானார்

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் திருச்செங்கோட்டில் காலமானார்
X
இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான டி.எம்.காளியண்ணகவுண்டர், வயது மூப்பின் காரணமாக திருச்செங்கோட்டில் காலமானார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ணன். 101 வயதான இவருக்கு, கடந்த ஆண்டு அவரது குடும்பத்தினர் 100வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.
கடந்த 1921ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அக்கரைப்பட்டி கிராமத்தில் பிறந்த டி.எம்.காளியண்ணன் எம்.ஏ, பி.காம் படித்தவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டு 1950ம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரானார்.
கடந்த 1950 -52ம் ஆண்டில் முதலாவது நாடாளுமன்றத்தில், எம்.பி ஆக இருந்தவர். 1952 முதல் 1967 வரை 3 முறை தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1967 முதல் 1972 வரை எம்எல்சியாக பணியாற்றினார். காமராஜர் காலத்தில் 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், பொருளாளராகவும் செயல்பட்டார்.

கடந்த 1954 முதல் 1957 வரை ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் போர்டு தலைவராக பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில் இப்பகுதியில் 2,000 பள்ளிகள் மற்றும் 300 நூலகங்களை திறக்க ஏற்பாடுகள் செய்தார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை, இவர் காலத்தில் தான் அமைக்கப்பட்டது.

வயது முதிர்வு காரனமாக சில நாட்கள் உடல்நலம் குன்றி இருந்த டி.எம். காளியண்ணன், இன்று மதியம் திருச்செங்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்திய அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil