அனைவருக்கும் பெண் குழந்தைகள் வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது: கலெக்டர்

அனைவருக்கும் பெண் குழந்தைகள் வேண்டும்  என்ற எண்ணம் உருவாகியுள்ளது: கலெக்டர்
X

நாமக்கல்லில் நடைபெற்ற ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சியில் பங்கேற்ற கலெக்டர் உமா, அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

அனைவருக்கும் பெண் குழந்தைகள் வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் சத்துணவுத்திட்டம் சார்பில், பெண் குழந்தைகளை காப்போல், பெண்களை படிக்க வைப்போம் என்ற திட்டத்தின் கீழ், சிறுதானிய விழிப்புணர்வு விழா மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

தற்போது ஆண், பெண் குழந்தைகள் என்ற சமூக வேறுபாடு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இன்றைய சமுதாயத்தில் அனைவரும் பெண் குழந்தை வேண்டும் என்றே எண்ணுகின்றனர். பல்வேறு அரசு துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாலின வேறுபாடு மறந்து அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கி உள்ளார்கள். இத்தகைய நிலை உருவாக்கிய பெற்றோர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஆண், பெண் அனைவரும் சமம் என்றாலும் குடும்பத்தை சிறப்பாக நடத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. பெண்கள் அனைத்துவித பணிகளையும் பொறுப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொள்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம் ஆகும். பெண் குழந்தைகளை பாதுகாத்து, அவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்குவது நம் அனைவரின் கடமை ஆகும். அனைவரும் சிறுதானிய உணவை உட்கொள்வதால் ஆரோக்கியமான நோயற்ற வாழ்வு வாழ முடியும். தொற்றா நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என அவர் கூறினார்.

தொடர்ந்து, சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பரமேஸ்வரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சசிகலா உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story