தை அமாவாசை: மோகனூர் காவிரியில் பொதுமக்கள் தர்ப்பணம் அளித்து வழிபாடு

தை அமாவாசை: மோகனூர் காவிரியில் பொதுமக்கள் தர்ப்பணம் அளித்து வழிபாடு
X

தர்ப்பணம் கொடுக்க காவிரி ஆற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள்.

தை அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் திரளான பொதுமக்கள் தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். ஒவ்வொரு மாதமும் தந்தை காரகன் சூரியனும், தாய் காரகன் சந்திரனும், ஒரே ராசியில் சந்திக்கும் போது அமாவாசை தினம் ஏற்படுகிறது. 30 திதிகளில் அமாவாசை திதி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏற்ற திதியாகும். இந்த நாளில், நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்வது வழக்கம். புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி, அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து படையலிட்டு, எள்ளும் தண்ணீரும் அளித்து வழிபடுவது சிறப்பாகும்.

குறிப்பாக, தை அமாவாசை தினத்தில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால், அவர்களின் சந்ததியரான நமக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இந்நாளில், முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுத்தால், அதன்மூலம், நமது முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு, அவற்றை ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.

இன்று தை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில், அதிகாலை முதலோ ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். எள், பச்சரிசி, தர்ப்பை வைத்து வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர். தொடர்ந்து, காவிரியில் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து ஆற்றங்கரையில் உள்ள அசல தீபேஸ்வரரை வழிபட்டனர். பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், காவிரி ஆற்றங்கரையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு