விவசாய நிலத்தில் புகுந்த காட்டாற்று வெள்ளம்: சீரமைப்பு பணியை கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, கொண்டிசெட்டிபட்டி ஏரி நிரம்பி, உபரிநீர் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் நகராட்சி கமிஷனர் சுதா.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதிகளில். கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடி, கொல்லிமலைப் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வருகின்றன. கொல்லிமலைப் பகுதியில் பெய் மழையால், நாமக்கல் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான, துசூர் ஏரி, தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நிரம்பி, கடைகால் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. அதன் மூலம், அரூர், ஆண்டாபுரம் உள்ளிட்ட உள்ள பல்வேறு ஏரிகளும் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.
கொல்லிமலையில் இருந்து உற்பத்தியாகும், கொக்குவாரி காட்டாறு, சிங்களாங்கோம்பை வழியாக சரப்பள்ளி ஏரியை அடைகிறது. கடந்த சில நாட்களாக சிங்களாங்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள கொல்லிமலையின் மலைப் பகுதிகளில், கன மழை பெய்ததால், கொக்குவாரி காட்டாற்றில் பாறைகள் மற்றும் கற்கள் உருட்டி வரப்பட்டு, ஆற்றின் பாதைமாறி விவசாய நிலங்களுக்குள், தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஜே.சி.பி., பொக்லைன் இயந்திரம் மூலம், பாதிக்கப்பட்ட கொக்குவாரி ஆற்றின் நடுவே இருந்த கற்களை அகற்றி சீரமைத்துள்ளது. சீரமைப்பு பணிகளையும், கரைகள் சரி செய்யப்படுவதையும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, நாமக்கல் கொண்டிசெட்டிபட்டி ஏரி நிரம்பியதால், அருகில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியின், ஒரு பகுதியில், மழை நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், மின் மோட்டார் மூலம், மழைநீரை விரைந்து வெளியேற்ற, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, வேட்டாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி உள்ளதையும், நீர் வெளியேற்றப்படுவதையும், கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் மழைநீர் வராதபடி, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். நாமக்கல் ஆர்.டி.ஓ., மஞ்சுளா, நகராட்சி கமிஷனர் சுதா, தாசில்தார்கள் சக்திவேல், செந்தில் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஏரி நிரம்பி உபரி நீர் சாலையில் அதிக அளவில் வெளியேறுவதால், மாணவர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, வாழவந்திகோம்பை பஞ்சாயத்து மக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், சேந்தமங்கலம் தாலுகா, வாழவந்திகோம்பை அடுத்த பூச்சனாங்குட்டை கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். தற்போது, தொடர் மழை காரணமாக, இங்குள்ள அம்மன்குளம் ஆத்துவாரியில், செட்டிக்குளம் ஏரி நிரம்பி, உபரி நீர் அதிக அளவில், வெள்ளமாக பெருக்கெடுத்து ரோட்டில் வெளியேறுகிறது. இந்த ரோட்டை அதிகமாகன பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு காரணமாக, 50 அடி ரோடு குறுகியதால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பயமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu