ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது
பட விளக்கம் : ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரி, எருமப்பட்டி கைகாட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது
நாமக்கல்,
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு எருமப்பட்டி கைகாட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் அருகே எருமப்பட்டியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் எருமப்பட்டியைச் சேர்ந்த இரு தரப்பினர் மனு அளித்தனர். இதற்கு எருமப்பட்டி பொன்னேரிப்பட்டி கைகாட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கப்பட்டது. போட்டி நடத்த கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ.25 ஆயிரம் முன் பணம் செலுத்த வேண்டும். இத்தொகையை செலுத்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஒரு தரப்பு விழாக்குழுவினர் சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர் பொன்னேரிப்பட்டி கைகாட்டி பொட்டிரெட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. நாங்கள் எருமப்பட்டி கைகாட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துகிறோம். எனவே முன்பணம் செலுத்தி போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். எனினும் அனுமதி வழங்காததால் எருமப்பட்டி கைகாட்டி அருகே மெயின் ரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் விழாக்குழவினர் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சேந்தமங்கலம் தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து அவர்களை எருமப்பட்டி போலீசார் கைது செய்தனர். மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டு இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu