நாமக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை: 60 கடைகளுக்கு சீல் வைப்பு
நாமக்கல் நகரில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள், போலீசார் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 60 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட பான் பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் போலீசார், உணவு பாதுகாப்புத் துறையினரின் எச்சரிக்கையை மீறி புற்றுநோயை உண்டாக்கும் வகையிலான, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 60 கடைகள் கண்டறியப்பட்டன. அவற்றுக்கு சீல் வைக்க, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் உத்தரவிட்டார்.
இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர்கள், போலீசாருடன் இணைந்து பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள், அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விபனை செய்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
நாமக்கல் நகரப் பகுதியில் 11 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. நாமக்கல் தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் தலைமையில் நகரில் உள்ள, பரமத்தி ரோடு, காவேட்டிப்பட்டி, சேந்தமங்கலம் ரோடு, கோட்டை ரோடு, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மற்ற கடை உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் சீல் வைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் 3 மாதத்திற்கு தங்களுடைய கடைகளைத் திறக்க முடியாது. அதன்பிறகு மாவட்ட நியமன அலுவலரிடம் முறையிட்டு தவறுக்கு, வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடு தளர்த்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu