தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஸ்டிரைக் 3ம் நாளாக நீடிப்பு - வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பாதிப்பு

நாமக்கல்,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினரின் காலைவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், மூன்றாவது நாளாக நீடிப்பதால், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும், 30,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 20,000க்கும் அதிகமான கடைகள், கிராமப்புறங்களில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில், 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், கட்டுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
மேலும், ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலிபில் கண்டறியப்பட்டால், தொடர்புடைய பணியாளர்களிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த அபராத தொகை, இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது. காலாவதியான பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் வசூல் செய்யக் கூடாது. தமிழகம் முழுவதும், கடந்த காலத்தில் மாவட்ட தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்கள், 100 கி.மீ. தொலைவில், நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக விற்பனையாளர்களை தேர்வு செய்வதற்கு முன், அருகில் உள்ள ரேஷன் கடைக்கு பணியிட மாறுதல் செய்து, காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை, இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாததால், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இப்போராட்டம் இன்று மூன்றாம் நாளாக நீடித்தது. அதன் காரணமாக, பல ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், டிபாசிட் தொகை பெறவும், கடன் பெறவும் மேலும் வரவு செலவு மேற்கொள்ள முடியாமலும், விவசாயிகள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கடுடைமயாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்களின் பிரச்சினையை முடித்து வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu