பேட்டப்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

மோகனூர் அருகே கீழ பேட்டப்பாளையம் மாரியம்மன் கோயில் விழாவில், பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மோகனூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான ஆண்களும், பெண்களும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, கீழப் பேட்டப்பாளையத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனி மாதத் திருவிழா ஒவ்வொரு ஆண்டு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா, கடந்த 17ம் தேதி இரவு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடிய பக்தர்கள், தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு செய்தனர்.
நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வடிசோறு வைத்து சுவாமிக்கு படையல் வைத்து படைத்தனர். நேற்று காலை, 9 மணிக்கு, திரளான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்துக்கு கொண்டு ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். அதையடுத்து, மாலை 3 மணிக்கு, நாச்சிமார் கோயிலில் இருந்து வேல் எடுத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற ஆண், பெண் பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதேபோல் பல பெண்கள் தங்களது தலையில் பூவாரிக் கொட்டி, சுவாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதையடுத்து இரவு 7 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் மேள தாளம் முழங்க மாவிளக்கு எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இன்று (ஜூன் 25) காலை கிடாவெட்டு நிகழ்ச்சியும், நாளை (ஜூன், 26), மாலை 4 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu