பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு
பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு
நாமக்கல்,
பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து, நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள இருக்கூர், மாணிக்கநத்தம் கிராம மக்கள், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
ப.வேலூர் தாலுகா, இருக்கூர், மாணிக்கநத்தம், வீராணம்பாளையம் பகுதிகளில், ராஜவாய்க்கால் நீரேற்று பாசனத்தின் மூலம், பல ஆண்டுகளாக விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் பிழைத்து வருகிறோம். இருக்கூர் மற்றும் மாணிக்கநத்தம் எல்லையில் உள்ள காமராஜ் நகரில், காலாவதியான கல்குவாரி நீர்நிலையில், பரமத்தி மற்றும் ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து கழிவு நீரை குழாய் மூலம் கொண்டு வந்து நிரப்பி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கஇடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தை, டி.ஆர்.ஓ., நேரில் ஆய்வு செய்து, கல்குவாரி நீர்நிலை சுற்றுப்பகுதியில் குடியிருப்பு, விவசாயம் மற்றும் கால்நடைகள் இருப்பதால், இந்த இடம் கழிவு நீரை சுத்திகரிக்க உகந்த இடம் அல்ல என ஏற்கனவே தெரிவித்துள்ளார். காலவதியான கல்குவாரி குழியில், மழை நீரை தேக்கி வைத்து விவசாய பயன்பாட்டிற்கு பயன்பாடுத்திக் கொள்ள வேண்டும். வேறு எவ்வகை பயன்பாட்டிற்கும் பயன்படுத்த கூடாது என்று அரசு விதி உள்ளது. இந்த விதியை மீறி, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ப.வேலூர், பரமத்தி டவுன் பஞ்சாயத்து பகுதிகளில்களில் வேறு தரிசு நிலங்கள் உள்ள நிலையில், விவசாயப்பகுதியை தேர்வு செய்து, விவசாயத்தையும், மக்களையும் அழிக்கும் திட்டமாக உள்ளது. கல்குவாரி நீர்நிலை பகுதியை சுற்றிலும், 5கிராமங்கள் உள்ளன. கல்குவாரி குழியில் மழை காலங்களில் நிறையும் நீர் மூலம், விவசாய கிணறுகள், ஆழ்துளை குழாய் கிணறு செறிவூட்டப்பட்டு வறட்சி காலத்தில் பயன்பெற்று வருகிறோம்.
இந்த கல்குவாரி நீர்நிலையில் கழிவு நீரை கொண்டு வந்து சேர்க்கும் போது, 5 கிராமங்களின் விவசாயம் பாழடைந்தும், குடிநீரில் கழிவு நீர் கலந்து எங்கள் உயிரையும், வாழ்வாதாரத்தையும் முற்றும் அழித்துவிடும் அபாயம் உள்ளது. இது குறித்து ஏற்கனவே கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நீர்நிலையில் கழிவு நீரை தேக்கி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu