நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்..

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்..
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமி.  

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு, நடப்பு ஆண்டில் முதன் முறையாக வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான சாலகிராம மலையின் மேற்குப் பகுதியில், மலையைக் குடைந்து குடவறைக் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ நாமகிரித் தாயார் உடனுறை நரசிம்மர் சாமியையும், சாலகிராம மலையையும், 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


ஆஞ்சநேயர் எடுத்து வந்த சாலகிராமம் மலையாக உருவாகி உள்ளதால், அந்த மலை வெட்டவெளியில் உள்ளது. இதுபோலவே ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு மேற்கூரை இல்லாமல் அமைந்துள்ளது சிறப்பாகும். தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

தினசரி சுவாமிக்கு 1,008 வடை மலை அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெறும். பின்னர், வெள்ளிக்கவசம் மற்றும் தங்கக்கவசம் சார்த்தப்பட்டு தீபாராதணை நடைபெறும்.

மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணைக் காப்பு, மலர் அங்கி, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும். ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி நாளில் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை அலங்காரம் செய்யப்படும். பங்குணி மாதத்தில் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ரங்காநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு முப்பெரும் தேர்த் திருவிழா நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் குளிர் சீசனில் மட்டுமே சுவாமிக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் நடைபெறும். இந்த ஆண்டின் முதல் வெண்ணைக் காப்பு அலங்காரம், கட்டளைதாரர் மூலம் நேற்று மாலை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு துவங்கி, சுமார் 10-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள், 120 கிலோ வெண்ணையைக் கொண்டு, சுவாமியின் உடல் முழுவதும் பூசி பல வண்ணங்களால் அலங்காரம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த அலங்காரம் நடைபெற்றது.

அலங்காரம் முடிவடைந்து, திரை விலக்கப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று அதிகாலை வரை சுவாமி வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், நாமக்கல் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்