அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட 430 பேர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது கைது..!

போலீசார் தடையை மீறி அதிமுக ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு, போலீசாரின் தடையை மீறி, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் உள்பட, 430 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, ராசிபுரத்தில், நேற்று காலை, போலீசார் தடையை மீறி முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி, முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமையில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்மணி, முன்னாள் எம்.எல்.ஏ., சரஸ்வதி, ஒன்றிய செயலாளர்கள் சரவணன், பொன்னுசாமி, வேம்பு சேகர், நகர செயலாளர் பாலசுப்ரமணி உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பேச்சு
அப்போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: மாணவியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசார், நம் அறப்போராட்டத்திற்கு தடை விதித்துள்ளனர். பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தி.மு.க., அரசை கண்டித்தும், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரியும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிக்கைவிட்டார். அதன் பிறகுதான், தி.மு.க.,வை சேர்ந்தவரான ஞானசேகரனை கைது செய்தனர். அவர், தி.மு.க.,வை சேர்ந்தவர் இல்லை என, மறுத்தனர். ஆனால், பொதுச்செயலாளர் ஞானசேகரன், தி.மு.க.,வை சேர்ந்தவர் என, ஆதாரமாக புகைப்படம், நோட்டீஸ்களை வெளியிட்டார். அதன் பிறகுதான் ஞானசேகரனை மட்டுமே கைது செய்துவிட்டு, வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என, போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
சார் யார் என்பது தெரியவேண்டும்
ஆனால், ஞானசேகரன், சம்பவ நடந்த இடத்தில் இருந்து, 'சார், சார்' என, மொபைல் போனில் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார். ஞானசேகரன், 'சார், சார்' என்று பேசுகிறார். அந்த சார் யார் என்று தான் நமக்கு தெரியவேண்டும். அவரை கைது செய்யக்கோரி தான் இந்த போராட்டம்.
சட்டத்திற்கு புறம்பாக எப்.ஐ.ஆர்.
சட்டத்திற்கு புறம்பாக, எப்.ஐ.ஆர்., வெளியாகியுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் பெயர், முகவரியை வெளியிடக்கூடாது என்பதையும் மீறி எப்.ஐ.ஆரில், அவரது பெயர், முகவரி மட்டுமின்றி பொது இடத்தில் தெரிவிக்க முடியாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.
உயர்நீதிமன்றத்திற்கு சென்றோம்
இதற்காகத்தான், நாம் உயர்நீதிமன்றத்திற்கு சென்றோம். தற்போது உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 25 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டதோடு, எஸ்.பி., அளவிலான, 3 பெண் போலீஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. நாம் ஒட்டும் நோட்டீஸ்களை கிழிக்க மட்டுமே போலீசார் செயல்படுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியாக இருந்தது
அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது. சட்டத்தின் ஆட்சியாக இருந்தது. தற்போது குற்றம் செய்பவருக்கு பாதுகாப்பு தரும் ஆட்சியாக இருக்கிறது. தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
அதிமுக பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போது போலீசார் தடுத்தனர்
தங்கமணி பேசிக்கொண்டிருக்கும்போதே போலீசார் அவரை தடுத்தனர். இதனால் பேச்சை பாதியில் முடித்துக்கொண்ட தங்கமணி, தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டார். இதையடுத்து ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையிலான போலீசார் தங்கமணி உள்ளிட்ட 430 பேரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu