நாமக்கல் அரசு மருத்துவமனை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
நாமக்கல் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்கள்
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்துடன், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தூய்மைப் பணியாளர்கள் நியமனம் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தொழிலாளர்கள் சட்டப்படி பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை (ரூ. 21 ஆயிரத்திற்கு மாற்றாக ரூ. 8 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது) சரியான முறையில் வழங்குவதில்லை என்றும் சலுகைகளையோ, இதர பணப் பயன்களையோ வழங்காமல் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரும்பாலான மாவட்டங்களில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 30-ந் தேதி இரவு 25-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்தபடி தினசரி ஊதியமாக ரூ.620 வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ததற்கான கார்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர் .
இவர்களின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இவர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். தற்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். இதை ஏற்றுக்கொண்டு தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu