மோகனூர் -கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தலா 10 முட்டை

மோகனூர் -கொரோனா தடுப்பூசி  செலுத்தியவர்களுக்கு தலா  10 முட்டை
X
நாமக்கல் மாவட்டம்  மோகனூர் அருகே நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம்  இலவசமாக முட்டை வழங்கினார்.
மோகனூர் அருகே தடுப்பூசி கொரோனா போட்டுக்கொண்டவர்களுக்கு தலா 10 முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனாபரவுதலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவில் இருந்து காத்துக்கொள்வதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில இதுவரை 50 சதவீத பொதுமக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர் என்று கலெக்டர் ஸ்ரேயா சிங் கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் 700 இடங்களில் நடைபெற்றது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள ஆரியூர் கிராமத்தில், கிழக்கு ஒன்றிய தி.மு.க., மற்றும் தி.மு.க கிளை சார்பில், தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் தலா 10 முட்டைகள் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவலடி தலைமை வகித்தார்.

நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தலா 10 முட்டை இலவசமாக வழங்கினார். காலை முதலே, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஒரே நாளில் 380 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களுக்கு, தலா 10 முட்டைகள் வீதம், மொத்தம் 3,800 முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் வக்கீல் கைலாசம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜாகண்ணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!