புதிய அரசுப்பள்ளி துவங்க கொல்லிமலை சித்தூர் நாடு பொதுமக்கள் கோரிக்கை

புதிய அரசுப்பள்ளி துவங்க கொல்லிமலை சித்தூர் நாடு பொதுமக்கள் கோரிக்கை
X

கொல்லிமலை அவுரிக்காட்டில் புதிய அரசுப்பள்ளி துவங்கக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த சித்தூர் நாடு மலைவாழ் மக்கள்.

புதிய அரசுப்பள்ளி துவங்க கொல்லிமலை தாலுகா சித்தூர் நாடு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து கொல்லிமலை தாலுகா சித்தூர் நாடு பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தியிடம் கோரிக்கை மனுவில், கொல்லிமலை ஒன்றியம், சித்தூர் நாடு பஞ்சாயத்து நரியன்காட்டில் ஊராட்சி ஒன்றி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது.

இந்த நரியன்காடு நடுநிலைப்பள்ளிக்கு 11 கிராமங்களில் இருந்து மாணவர்கள் சென்று கல்வி படித்து வருகின்றனர். இந்த 11 கிராமங்களில் உள்ள குழந்தைகள் மற்றும், எக்கம்பாளி, பட்டங்கிராய், வாழக்காட்டுப்புதூர், அவிரிக்காடு, பேக்காட்டுப்புதூர் ஆகிய 5 கிராமங்களில் இருந்து தற்போதைய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ள நரியன்காட்டிற்கு ஒருவழி காட்டுப்பாதை வழியாக நீண்டதூரம் மாணவர்கள் நடந்து சென்று கல்வி படித்து வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே தொடர்ந்து பள்ளிக்கு சென்று கல்வி கற்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. மழை மற்றும் இயற்கை சீற்ற காலங்களில் மாணவர்கள் பள்ளி செல்லமுடியாத சூழல் உள்ளது. தற்போது நடுநிலைப் பள்ளி அமைந்துள்ள நரியன்காட்டிலிருந்து எக்கம்பாளி கிராமம் 4கி.மீ தூரத்திலும், பட்டங்கிராய் கிராமம் 2 கி.மீ தூரத்திலும், வாழக்காட்டுப்புதூர் கிராமம் 2.5 கி.மீ தூரத்திலும், அவிரிக்காடு கிராமம் 1.5கி.மீ தூரத்திலும், பேக்காட்டுப்புதூர் கிராமம் 3.5கி.மீ தூரத்திலும் உள்ளது.

எனவே 5 கிராமங்களை உள்ளடக்கி அதில் உள்ள கல்வி படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அவுரிக்காடு கிராமத்தினை மையமாகக் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி படிக்க புதிய அரசு தொடக்கப்பள்ளி அமைந்தால் மாணவர்கள் சிரமம் குறைந்து கல்வி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.

எனவே மலைக்கிராம பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் ஆவலை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய அரசு தொடக்கப்பள்ளி அவுரிக்காட்டில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!