அரசு மரியாதையுடன் காளியண்ணன் உடல் திருச்செங்கோட்டில் தகனம்

அரசு மரியாதையுடன் காளியண்ணன் உடல் திருச்செங்கோட்டில் தகனம்
X

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், திருச்செங்கோட்டில் தகனம் செய்யப்பட்டது. இதில், அமைச்சர் மதிவேந்தன் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் உடல், அரசு மரியாதையுடன் திருச்செங்கோட்டில் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டது.

இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரும், முதல் பார்லிமெண்டின் எம்பியும், முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்எல்சி ஆன, காளியண்ணன் திருச்செங்கோட்டில் வசித்து வந்தார். 101 வயதான அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.
பல்வேறு பதவிகளை வகித்த, மூத்த தலைவரான காளியண்ணனுக்கு, அரசு மரியாதை செலுத்த வேண்டும் என அரசியல் கட்சிப் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையொட்டி அரசு சார்பில் காவல்துறை மரியாதை செலுத்த, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, திருச்செங்கோடு அருகே செங்கோடம்பாளையத்தில் உள்ள நகராட்சி மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் மலர்வளையம் வைத்து, தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ், நாமக்கல் எம்.பி சின்ராஜ், திருச்செங்கோடு ஆர்டிஓ மணிராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் டாக்டர் செந்தில் உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது மூத்த மகன் ராஜேஸ்வரன், இறுதிச் சடங்குகளை செய்தார். அதன்பின் இரவு 7 மணியளவில், 21 குண்டுகள் முழங்க காளியண்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!